கொல்கத்தாவில் 5ம் ஆண்டு சர்வதேச திரைப்படவிழா: தமிழில் "திரு" குறும்படம் முதலிடம் பிடித்து சாதனை


கொல்கத்தாவில் 5ம் ஆண்டு சர்வதேச திரைப்படவிழா:  தமிழில் திரு குறும்படம் முதலிடம் பிடித்து சாதனை
x

முன்னாள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் காவல் துறை அதிகாரியாகவே நடித்துள்ளார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் இண்டர்நேஷ்னல் ஸ்டார் பிலிம் பெஸ்டிவல் அவார்ட்ஸ் (ISFFA) சார்பில் நடந்த 5ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குநர் அருந்ததி அரசு என்பவரின் "திரு" என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலகளவில் 63 நாடுகளைச் சேர்ந்த 70 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படங்கள் போட்டியில் கலந்து கொண்டன. அதில் ஒரு பகுதியாக தமிழ் மொழி சார்பில் கலந்து கொண்ட 200 குறும்படங்களில் "திரு" என்ற குறும்படம் மிகச்சிறந்த தமிழ் குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து அக்குறும்படத்தின் இயக்குநர் அருந்ததி அரசிடம் கேட்டபோது,

"தூத்துக்குடி மாவட்ட காவல் துறையும் வானம் எண்டர்டெய்ன்மெண்ட்டும் இணைந்து தயாரித்த இப்படத்தில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் காவல் துறை அதிகாரியாகவே நடித்துள்ளார். திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக இக்குறும்படத்தை இயக்கியுள்ளேன்.

இப்படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை, திருநங்கை சகோதரிகள், படத்தில் நடித்த பிற திரைக் கலைஞர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், நிர்வாக மேற்பார்வையாளர், இணை தயாரிப்பாளர்கள் மற்றும் கொல்கத்தா சென்று போட்டியில் பங்கேற்க உதவி புரிந்தவர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story