

மும்பை,
மனுதாரர் தரப்பில் சன்னி லியோன் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி வழக்குக்கான ஆதாரங்களை கோர்ட்டில் நிரூபிக்கவில்லை என்ற காரணத்தால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயண் லால்ஜெயின் என்பவர், அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன், அவரது கணவர் மற்றும் மேலாளர் மீது கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் ஒரு புகார் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், "சன்னி லியோனுக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நான் பெற்றுத்தந்தேன். இதற்காக பேசப்பட்ட ரூ.1 கோடியே 75 ஆயிரம் தொகையிலிருந்து எனக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், எனக்கு தர வேண்டிய முழு கமிஷன் தொகையையும் தராமல் அவர்கள் ஏமாற்றிவிட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த அந்தேரி கோர்ட்டு, சன்னி லியோன் மீதான புகாரை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து ஓம்பிரகாஷ், மும்பை திண்தோஷி கூடுதல் செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஏ.சானே, மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். அவரது தனது தீர்ப்பில், "வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆவணங்களை பார்க்கும்போது, இது முழுக்க முழுக்க ஒரு வணிக ரீதியான பணப்பரிவர்த்தனை பிரச்சினை என்பது தெளிவாகிறது. இருதரப்பினருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாக மட்டுமே இதை கருதமுடியும். மனுதாரர் தரப்பில் சன்னி லியோன் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி வழக்குக்கான ஆதாரங்களை கோர்ட்டில் நிரூபிக்கவில்லை. எனவே, கீழ் கோர்ட்டு இந்த வழக்கை நிராகரித்தது முற்றிலும் சரியானது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.