‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ - நடிகர் ஸ்ரீமன்

பதவியேற்பு விழா சீக்கிரமாக நடக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாக நடிகர் ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.
‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ - நடிகர் ஸ்ரீமன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமான், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“நண்பா... ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று சொல்லிவிட்டு, முதல்-அமைச்சர் நாற்காலியில் சென்று நீ அமர வேண்டும். காலதாமதம் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் சட்டத்திற்கு நீ கொடுக்கும் மரியாதை, உனக்கு நிச்சயம் நீதியை பெற்றுத் தரும். நீ வர வேண்டும், நாங்கள் காத்திருக்கிறோம்.

பதவியேற்பு விழா சீக்கிரமாக நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஈஸ்வர பெருமானையும், அம்பாளையும் வேண்டிக் கொள்கிறேன். யார் என்ன விமர்சனம் செய்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு எல்லா கட்சிக்காரர்களும் நண்பர்கள்தான். இந்த முறை என் நண்பன் வர வேண்டும், முதல்-அமைச்சர் ஆக வேண்டும். இதுவே ஒரு ஆசை.

அதற்கான தகுதிகள் அனைத்தும் வந்து சேர வேண்டும். அதற்கு இறைவன் வழி வகுக்க வேண்டும். நல்லதே நடக்கும், நம்பிக்கையுடன் இருப்போம். என் நண்பன் முதல்-அமைச்சர் ஆன பிறகு இந்த வார்த்தையை என்னால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, அதனால் இப்போதே சொல்லிவிடுகிறேன்... விஜிமா, நீ வரணும்..”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com