'16 வயதினிலே' முதல் 50 ஆண்டு சாதனை வரை... தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்

மறைந்தாலும் மறையாத பெயராக தமிழ் சினிமா வரலாற்றில் பாக்யராஜ் என்றும் நிலைத்திருப்பார்.
'16 வயதினிலே' முதல் 50 ஆண்டு சாதனை வரை... தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் கே. பாக்யராஜ் மறைந்த செய்தி தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜாவின் பட்டறை

தனது குருநாதர் பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியை தொடங்கியவர். பின்னர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என பல அவதாரங்களை எடுத்து அனைத்திலும் வெற்றியும் கண்டவர்.

அவருடைய திரைப்பயணத்தில் அந்த 7 நாட்கள் முக்கியமான படம். அதேபோல், சுவரில்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, சின்ன வீடு, மவுன கீதங்கள், சுந்தரகாண்டம், டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு என்று எத்தனையோ படங்களை சொல்லலாம்.

முத்திரை பதித்த பாக்யராஜ்‌

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜா தான். கோலிவுட்டின் 2 பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தை இயக்கும் போதுதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் பாக்யராஜ்.

1977-ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தை அடுத்து, கிழக்கே போகும் இரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களிலும் பாக்யராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதுதவிர சிறுசிறு வேடங்களிலும் பாக்யராஜ் நடித்தார். இதன் தொடர்ச்சியாக 1979-ம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதே ஆண்டில் பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

1977-ம் ஆண்டு உதவி இயக்குநராகி அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடிகர், இயக்குநர் என தனது சினிமா பயணத்தில் விரைவாக முன்னேறினார் பாக்யராஜ். தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆளுமையாக பல ஆண்டுகள் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் பாக்யராஜ்‌. தற்போதும் கூட ஓரிரு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

50 ஆண்டு திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் தனது 50-வது பொன்விழா ஆண்டை இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு செய்த பாக்யராஜுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா நடத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

திரையுலகில் பெரும் சோகம்

இந்நிலையில், அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்தாலும் மறையாத பெயராக தமிழ் சினிமா வரலாற்றில் பாக்யராஜ் என்றும் நிலைத்திருப்பார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com