

சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூருவிலும் ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டைத் திருவிழாவைப் போல் கொண்டாடி வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல்வேறு விதங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வது முதல் பிரமாண்ட கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது வரை ரசிகர்களின் செயல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது அங்கப்பிரதட்சணம் செய்து, மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மேலும், ரஜினிகாந்துக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரும், தீவிர ரஜினி ரசிகருமான கார்த்திக், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று தனது வீட்டிலேயே சிறப்பு வழிபாடு நடத்தினார். இதற்காக வீட்டில் ரஜினிகாந்தின் முழு உருவக் கட்-அவுட்டை வைத்து, பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்களைச் செய்தார். தொடர்ந்து, 108 தேங்காய்களை உடைத்தும் வழிபாடு நடத்தினார்.
சென்னை பூவிருந்தவல்லியில் ரஜினி ரசிகர் ஒருவர், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது பி.எம்.டபிள்யூ. காரில் படத்தின் பெயர் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்கரித்துள்ளார். வித்தியாசமான முறையில் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய அவரது செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பெங்களூருவில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்க்க வந்த ரஜினி ரசிகர் ஒருவர், ‘ONE SUN.. ONE MOON.. ONE THALAIVAR!’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வந்தார். இது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதேபோல், ரஜினிகாந்தின் உருவம் அச்சிடப்பட்டு, ‘அன்றும்... இன்றும்... என்றும்... தலைவர்’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிந்தும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர்.
விழுப்புரத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கு ரஜினிகாந்தின் 30 அடி உயரக் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூருவிலும் ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டைத் திருவிழாவைப் போல் கொண்டாடி வருகின்றனர்.