சிம்ரன் முதல் நயன்தாரா வரை.. எப்படி சமமான வாய்ப்பளிப்பீர்கள்? - அஸ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்ய பதில்

‘தர்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சிம்ரன் முதல் நயன்தாரா வரை.. எப்படி சமமான வாய்ப்பளிப்பீர்கள்? - அஸ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்ய பதில்
Published on: 

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் பல முன்னணி நடிகைகள் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கான கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து அறிவித்திருந்தார். இப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாயகிகளுக்கு சமமான வாய்ப்பு எப்படி?

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம் நடிகர் சித்ரா லட்சுமணன், "தர்மன் படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, நயன்தாரா, ஸ்ரீலீலா என இவ்வளவு பேர் இருக்கிறார்களே, இவர்களுக்கு எப்படி சமமான வாய்ப்பளிப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, "அனைவருக்கும் பின்னாலும் ஒரு வலுவான கதை உள்ளது. அப்படித்தான் கதையை எழுதியிருக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்தின் படப்பிடிப்பு ஆர்வம் குறித்துப் பேசிய அவர், "ரஜினி சார் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்து இரவு 10 மணி வரை நடிக்கிறார். நாளை எடுக்கலாம் என்றாலும், 'எப்படியும் நான்தானே நடிக்க வேண்டும், இன்னைக்கு எடுத்தால் என்ன, நாளைக்கு எடுத்தால் என்ன?' என்று கூறுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த அர்ப்பணிப்பையும், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்த இயக்குநரின் விளக்கத்தையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

X