

சென்னை,
நடிகர் யஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' (Toxic) திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோவா மாபியாவை மையமாகக் கொண்ட கதை
1940 முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக 'டாக்ஸிக்' உருவாகியுள்ளது.
முதலில் இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
டீசருக்கு கலவையான வரவேற்பு
சமீபத்தில் வெளியான 'டாக்ஸிக்' படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சிலர் ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கருத்து தெரிவித்ததால், டீசர் சர்ச்சைக்கும் உள்ளானது.
நடிகர்களின் சம்பள விவரம் வெளியானதா?
இந்த நிலையில், 'டாக்ஸிக்' திரைப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
அதன்படி, நடிகர் யஷ் இந்தப் படத்திற்காக ரூ.50 கோடி சம்பளம் பெறுவதுடன், படத்தின் லாபத்தில் பங்கும் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கியாரா அத்வானி ரூ.15 கோடி, நயன்தாரா ரூ.12 கோடி, ருக்மணி வசந்த் ரூ.5 கோடி, ஹுமா குரேஷி ரூ.3 கோடி, தாரா சுட்டாரியா ரூ.2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், இயக்குநர் கீது மோகன்தாஸும் சம்பளத்துடன், படத்தின் லாபத்தில் பங்கு பெறும் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த சம்பள விவரங்கள் குறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.