

சென்னை,
‘இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படும் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.
'16 வயதினிலே' திரைப்படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த பாரதிராஜா, இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பல படைப்புகளை கொடுத்தவர்.
சென்னையில் அவருடைய உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி அல்லிநகரம். அவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலை சந்திப்பில் காட்ரோடு என்ற இடத்தில் உள்ளது.
அந்த தோட்டத்தில்தான் இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு அவருடைய மகள் ஜனனி இறுதிச்சடங்குகளை செய்தார். பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி என்று மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம்,
எனது கணவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி அன்று காலமான நிலையில் எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி. எனது கணவர் இறுதி சடங்கில் முழு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கும் ஆறுதலாய் நின்ற அனைத்து அமைச்சர் பெருமக்கள், தேவையான ஏற்பாடுகள் செய்த தேனி மாவட்ட ஆட்சியர்,
காவல் கண்காணிப்பாளர் மற்றும் சென்னை மற்றும் தேனியை சேர்ந்த அரசு அதிகாரிகள், இரங்கல் செய்தி வெளியிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள், செய்தி அறிந்து ஓடோடி வந்து துணை நின்ற திரையுலகினர், ரசிகப் பெருமக்கள், உறவுகள், நண்பர்கள் மற்றும் அவரின் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.