

மதுரை,
மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனுஷ் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அந்தப் பேனரில் வாகனப் பதிவு எண்ணைப் போன்று ‘TN 58 CM 2031’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘இயக்கத்தின் முதல்வரே’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்த தனுஷ் ரசிகர்கள், ஆட்டம், பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தை அவருடைய வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
சந்தன மரக்கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பல்வேறு திரையரங்குகள் முன்பு தனுஷின் பிரமாண்ட கட்-அவுட்கள் மற்றும் பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர். அந்த வகையில், மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனுஷ் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அந்தப் பேனரில் வாகனப் பதிவு எண்ணைப் போன்று ‘TN 58 CM 2031’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘இயக்கத்தின் முதல்வரே’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
தனுஷ் அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருவதாகப் பேசப்படும் நிலையில், அவரது ரசிகர்கள் 2031-ம் ஆண்டு அவர் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பேனரை வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் வருகை
குறிப்பாக, ‘TN 58 CM 2031’ என்ற வாசகம் தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தனுஷ் ரசிகர்கள் பலரும் இதனை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.