படத்தை விமர்சனம் செய்ய பணம் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது - "96" பட இயக்குனர்


படத்தை விமர்சனம் செய்ய பணம் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது - 96 பட இயக்குனர்
x

இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ‛ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார், அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார்.

இதையடுத்து '96' படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம் குமார் '96' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் பிரேம் குமார், " தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அது இப்போது பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இன்று பல விமர்சகர்கள் இருக்கின்றனர். நான் அனைத்து விமர்சகர்களையும் இதில் சொல்லவில்லை. சில விமர்சகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்கள் பேசும் தொனி என அனைத்தும் எதிர்மறையாக இருக்கின்றன. படம் வெளியான பிறகு முதல் வாரத்தை அவர்கள் இலக்காகக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு அஜெண்டாவை வைத்து இதனைச் செய்கின்றனர். ஒரு திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் படத்திற்கு வசூல் வந்துவிட்டால், தயாரிப்பாளர் தானாகவே அவருடைய அடுத்த படத்தை உங்களுக்குக் கொடுப்பார்.

பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்வது இப்போது 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது. நேர்மையான விமர்சகர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். நேர்மையான விமர்சகர்களிடம் ஒரு படத்தைச் சரியாக விமர்சனம் செய்வதற்குப் போதுமான திறமைகள் இல்லை. ஓரிரு நபர்களால் மட்டுமே நல்ல விமர்சனங்களைக் கொடுக்க முடிகிறது. அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களே இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களைத்தான் பார்க்கின்றனர். இப்படியான விமர்சனங்களை வைத்து, திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என முடிவு செய்கின்றனர். இந்தப் பிரச்னையைப் பரிசீலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சில விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்" என கூறியிருக்கிறார்.

1 More update

Next Story