கஜினி- 2 அப்டேட் கொடுத்த சூர்யா

சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் 'கஜினி 2' குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
கஜினி- 2 அப்டேட் கொடுத்த சூர்யா
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏ.ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினர் புதுடெல்லியில் படத்திற்கான புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் அளித்த பேட்டியொன்றில் 'கஜினி 2' நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சூர்யா. அதில், "நீண்ட நாட்கள் கழித்து தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், 'கஜினி 2' ஐடியா உடன் வந்து பண்ணலாமா என்று கேட்டார். கண்டிப்பாக சார் பண்ணலாம் என கூறியிருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. அது நடக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'கஜினி'2005-ம் ஆண்டு வெளியான இப்படம் அமீர்கான் நடிக்க 2008-ம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் ஏ.ஆர்.முருகதாஸே இயக்கி இருந்தார். இரண்டுமே மாபெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது 'கஜினி 2' படத்தை தமிழில் சூர்யாவும், இந்தியில் அமீர்கானும் நடிக்க ஒரே சமயத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் இப்படத்தை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com