தேவா இசைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரங்கள்

பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா இன்று காலமானார்.
தேவா இசைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரங்கள்
Published on: 

தேனிசைத்தென்றல் தேவா, ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் சபாநாயகர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் தேவா பாடல் ஒலிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவா இசைக்கு கிடைத்த மரியாதை

தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவரும், தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை, ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கடந்த 2025ம் ஆண்டு கவுரவித்தது.

தேனிசைத்தென்றல் தேவா, ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் சபாநாயகர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் முக்கியச் சின்னமான செங்கோலும் அவருக்கு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய அரசியல் கவுரவமாகக் கருதப்படுகிறது.

தேவாவின் ரசிகரான சிங்கப்பூர் அதிபர்

சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் இசையமைப்பாளர் தேவாவின் பாடலுக்கு மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான செல்லப்பன் ராமநாதன் எனப்படும் எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூரின் 6வது அதிபராக பதவி வகித்தார். சிங்கப்பூரின் வரலாற்றில் மிக நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

தேவாவின் பாடல்கள் மீது தீராத பற்று கொண்டிருந்த நாதன், தான் இறந்த பிறகு தேவா இசையமைத்த ‘தஞ்சாவூர் மண்ணெடுத்து’ பாடலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். சேரன் இயக்கத்தில் முரளி, மீனா நடித்த ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்

கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 92வது வயதில் எஸ்.ஆர். நாதன் காலமானார். அவரது விருப்பப்படியே, உலகத் தலைவர்கள் பங்கேற்ற சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இறுதி நிகழ்வில் தேவாவின் ‘தஞ்சாவூர் மண்ணெடுத்து’ பாடல் ஒலிக்கப்பட்டது. ஒரு நாட்டின் அதிபருக்கான அரசு இறுதி நிகழ்வில் தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் பாடல் ஒலித்தது, தமிழ்த் திரையிசை வரலாற்றில் அரிதான பெருமை. அந்த அளவுக்குத் தன் இசையால் எல்லைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்த தேவாவின் மறைவு, தமிழ்த் திரையிசைத் துறைக்குப் பேரிழப்பாகும்.

அரசு மரியாதை

இசையுலகுக்கு ஆற்றிய சேவையைச் சிறப்பிக்கும் வகையில், தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இறுதிச் சடங்கு

தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் நாளை மதியம் 1 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com