தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யாராவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (வயது 32). கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த 'வாகா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அவர் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கநகையை மறைத்து எடுத்து வந்தார். விசாரணையில் அவர் தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 10-க்கும் மேற்பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், அங்கிருந்து வரும்போதெல்லாம் பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பெங்களூரில் உள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.2.67 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இந்த பணம் கட்டுக்கட்டாக கட்டில் மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல ரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தங்கக்கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக அமெரிக்க குடியுரிமை உள்ள தருண்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் அடிக்கடி நகைகளை கடத்தி வந்ததற்கு கர்நாடக போலீஸ் உயர் அதிகாரியான தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தியது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பலமுறை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். வருவாய் புலனாய்வு இயக்குனரகம் குறிப்பிட்ட காலகட்டத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தவறியதால், ரன்யாராவ் மற்றும் தருணுக்கு நிபந்தனையுடன் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. ஆனால், அன்னிய செலாவணி மற்றும் கடத்தல் மீறல்கள் தொடர்பான காபிபோசா சட்டம் நடிகை ரன்யா ராவ் மீது பாய்ந்துள்ளது.
காபிபோசா சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதை, வழக்குகளை ஆய்வு செய்யும் நீதித்துறை ஆலோசனை குழு உறுதி செய்துள்ளது. இது ஒரு ஆண்டு சிறையில் இருந்து வெளிவர முடியாத சட்டப்பிரிவு ஆகும். இதன் மூலம் நடிகை ரன்யா ராவுக்கு இனி ஒரு வருடம் ஜாமீன் கிடைக்காது. அவர் ஓராண்டு சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.






