கோல்டன் குளோப் விழா கோலாகலம்...விருதுகளை குவித்த திரைப்படங்கள்

83-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று நடைபெற்றது.
"Golden Globe Awards 2026: Leonardo DiCaprio Film Shines Big"
Published on

கலிபோர்னியா,

சினிமாவில் ஆஸ்கார் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள், சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 83-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.

முக்கிய விருதுகள் விவரம்:

மியூசிக்கல் - காமெடி பிரிவில், பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியோனார்டோ டி காப்ரியோ நடித்த ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் திரைப்படம் விருதுகளை குவித்தது. இந்த படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு,

*சிறந்த திரைக்கதை

*சிறந்த இயக்குனர்

*சிறந்த துணை நடிகை உள்ளிட்ட

முக்கிய 4 விருதுகளை தட்டிச் சென்றது.

மார்ட்டி சுப்ரீம் திரைப்படத்துக்காக திமோதி சாலமே சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ படத்தில் நடித்ததற்காக ரோஸ் பைர்ன் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிராமா பிரிவில் சிறந்த படமாக ஹாம்னெட் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் பெற்றார். சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை சின்னர்ஸ் திரைப்படம் வென்றது.

டேயானா டெய்லர் சிறந்த துணை நடிகையாகவும், தி சீக்ரெட் ஏஜென்ட் படத்தில் நடித்த வாக்னர் மவுரா சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்டிமென்டல் வேல்யூ படத்தில் நடித்த ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார்.

அனிமேஷன் பிரிவில் சிறந்த படமாக கே-பாப் டீமான் ஹண்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டது. ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் சிறந்த படமாக பிரேசிலிய திரைப்படமான தி சீக்ரெட் ஏஜென்ட் விருது பெற்றது.லிமிடெட் சீரிஸ் பிரிவில் அடலசென்ஸ் தொடர் சிறந்த தொடர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என 4 விருதுகளை தட்டி தூக்கியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com