அபுதாபி அரசு சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
Published on

அபுதாபி,

ஜெயிலர் திரைப்படம் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் திரைப்படமான வேட்டையனில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த 13-ந் தேதி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஓய்வுக்காக கடந்த 16-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு சென்றார்

இந்த நிலையில் நேற்று அவருக்கு அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது. அந்த துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் விசாவுக்கான அமீரக அடையாள அட்டையை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோல்டன் விசாவுக்கான ஏற்பாடுகளை செய்த லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நந்தகுமார், பிஜூ கொட்டாரத்தில் மற்றும் ரெஜித் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ''அபுதாபி அரசிடம் இருந்து மதிப்புமிக்க அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். இதனை வழங்கிய அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் இந்த விசாவை எளிதாக கிடைப்பதற்கு ஆதரவளித்த லூலூ குழுமத்தின் தலைவரும் எனது நல்ல நண்பருமான எம்.ஏ யூசுப் அலிக்கும் எனது நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்த பிறகு அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

தொடர்ந்து அவர் அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட இந்து கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அவர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com