குட் பேட் அக்லி பட விவகாரம் - இளையராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


குட் பேட் அக்லி பட விவகாரம் - இளையராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Sept 2025 10:02 PM IST (Updated: 17 Sept 2025 10:06 PM IST)
t-max-icont-min-icon

தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இளையராஜா பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

‘குட் பேட் அக்லி’ படத்தில், தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பினார். பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' படத்தில் இசையமைப்பாளர் இளையராஜவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்க கோரி, 'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இசை நிறுவனங்களிடம் இருந்து இந்த பாடல்களின் உரிமை பெறப்பட்டுள்ளது. இடைக்கால தடையால், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து, படத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களில் திரையிட்ட பின், எவ்வாறு தடை உத்தரவு பெற முடியும் என வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இளையராஜா பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24 ஆம் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story