ரஜினி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் , வீடு திரும்புவது குறித்து இன்று மாலை முடிவு - ஆஸ்பத்திரி நிர்வாகம்

ரஜினி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என அப்பலோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறி உள்ளது.
Doordarshan National
Doordarshan National
Published on

ஐதராபாத் :

தர்பார் படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய 40 சதவீதம் வரை முடிந்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி, அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினிகாந்த், ஜனவரி யில் கட்சியை தொடங்கு வதாகவும், டிசம்பர் 31-ந் தேதி கட்சி அறிவிப்பு வெளியிடப்படும், என்றும் அறிவித்தார்.

தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அடுத்த மாதத்துக்கு முன்பாக அண்ணாத்த படத்தில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.

இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14-ந்தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். ரஜினிகாந்த்-நயன்தாரா காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்த மாதம் 12-ந்தேதிக்குள் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனால் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. அதிகாலை முதல் இரவு வரை தினமும் பரபரப்பாக ரஜினிகாந்த் நடித்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்-நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்திருப்பதாகவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பு கருதி அண்ணாத்த படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐதராபாத்திலேயே ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தநிலையில் ரஜினிகாந்த் திடீரென நேற்று காலையில் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட முதல் அறிக்கையில்

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்றாலும், அவரது ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருந்தன. மேலும் அவருக்கு பரிசோதனை தேவைப்படுவதால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பு, அவரது ரத்த அழுத்தம் சீராக ஆகும் வரையில் ஆஸ்பத்திரியில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பரிசோதனைகள் நடக்கும்.

ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் அவருக்கு கிடையாது. நாடித்துடிப்பு உள்பட மற்ற செயல்பாடுகள் சீராக உள்ளது என கூறி இருந்தது.

மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரஜினிகாந்தை யாரும் சந்திக்க முடியாது என்பதால் யாரும் அவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம் என்று ஆஸ்பத்திரி நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அவரது உடல் நிலை குறித்து விசாரைத்தனர்.

ஆந்திர முன்னாள் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு டு தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் , கமல்ஹாசன், ராகவ லாரன்ஸ் ஆகியோர் அவர் பூரண குணம் பெற வேண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று இரண்டாது நாள் அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில்

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக தான் இருந்தாலும், நேற்றைய தினத்தை விட குறைவாக உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கவலைப்படுவதற்கு எதுவும்யில்லை. அவருக்கு இன்னும் சில பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அதன் முடிவுகள் இன்று மாலை தான் கிடைக்கும்.

ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் கவனமுடன் தரப்படுவதுடன், அவரது உடல்நிலையை உன்னிப்பாக டாக்டர்கள் கவனித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் காரணமாக அவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதன் அடிப்படையில், ரஜினி வீடு திரும்புவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று அவரது உடல்நலம் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமி போனில் விசாரித்தார். அதுபோல் துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் அன்புசகோதரர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதனால் பலரும், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் கோயில்களில் வழிபாடு செய்வது, பூஜை செய்வது என ஈடுபட்டுள்ளனர். இதனால் சமூகவலைதளமான டுவிட்டரில் ரஜினியின் உடல்நிலையை வைத்து #RajinikanthHealthCondition, #Rajinikanth, #RajinikanthHealth போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com