

கொச்சி,
கேரளம் மாநிலம் கொச்சியில் கடந்த 17.2.2017 அன்று ஓடும் கேரவனில் பிரபல நடிகை பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கில் பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சலீம், பிரதீப் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 8.12.2025 அன்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில் குமார், சரத் ஆகிய 4 பேர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நடிகை பாலியல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அதில், நடிகர் திலீப் உள்பட 4 பேர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை முறையாக கையாளவில்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டும், அவற்றை விசாரணை நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை.
எனவே, விசாரணை நீதிமன்றத்தின் ஒரு தலைப்பட்சமான நிலைப்பாட்டுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதனை கேரள ஐகோர்ட்டு பரிசீலித்து, விரிவான விசாரணை மேற்கொண்டு விடுவிக்கப்பட்ட 4 பேருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், ஜோபின் செபஸ்டின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதோடு நடிகர் திலீப் உள்பட 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது.