சினிமா இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம்: 4 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை விசாரித்து வருகிறார்கள்.

சினிமா இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம்: 4 பேர் கைது
Published on

மும்பை,

இந்தியில் கோல்மால், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. இவர் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது 9 மாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். கீழ் தளங்களை வாடகைக்கு விட்டுள்ள அவர், கட்டிடத்தின் கடைசி 2 மாடிகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில் மர்ம நபர்கள் ரோகித் ஷெட்டியின் குடியிருப்பு கட்டிடத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் கட்டிடத்தின் முதல் மாடியின் சுவா், பால்கனி கண்ணாடி பேனல்களை துளைத்தன. இந்த தாக்குதல் சம்பவம் நடந்த நேரத்தில் இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டில் இருந்தார். அவர் தூங்கிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இயக்குனர் ரோகித் ஷெட்டி மற்றும் அவரது கட்டிடத்தில் இருந்த யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த கட்டிட காவலாளி வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் உயர் அதிகாரிகள் ரோகித் ஷெட்டி வீட்டுக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.முதல் தளத்தில் ரோகித் ஷெட்டியின் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) இருந்துள்ளது. ஆசாமிகள் அதனை நோக்கி சுட்டு இருப்பது தெரியவந்தது.

போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் துப்பாக்கி குண்டுகள் துளைத்த இடங்களில் தடயங்களை சேகரித்தனர். மேலும் கட்டிடம் மற்றும் அதன் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்துக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்ற நிலையில், 4 பேரை உள்ளூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com