

அஜித் நடிகர் என்பதையும் தாண்டி பைக் ரேஸர் மற்றும் கார் ரேஸர் என்பதே அவருக்கான அடையாளமாகும். நடிப்பை விட ரேஸில் தான் தனக்கு விருப்பம் அதிகம் என பலமுறை கூறியுள்ளார் அஜித். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி துபாய் முதல் மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார்.
அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை ஏ.எல்.விஜய் ஆவணப்படமாக்கி வருகிறார். மேலும் அஜித்தின் கார் ரேஸ் அணிக்கு விளம்பர படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். அஜித்குமாரின் ரேஸின் மீதான ஆர்வம் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து ஆவணப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இப்படத்தின் முன்னோட்டம் ‘ரேஸிங் என்பது நடிப்பு இல்லை அது உண்மை’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதில் அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப் பயணம் கொண்டது முதல் கார் ரேஸிங்கில் கலந்தது வரை ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியிருந்தது. ரேஸ் குறித்து அஜித் பேசும் பேட்டியும் இடம் பெற்றுருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த 27ம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹேப்பி ராஜ்’. தந்தை, மகன் இடையேயான பாசத்தை விளக்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ், மரியம் ஜார்ஜ், மதுரை முத்து உட்பட திரைப்பட குழுவினர் பலர் இன்று மதுரை செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கோபுரம் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களுடன் சிறிது நேரம் படம் பார்த்தனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் “மதுரை மக்களுடைய அன்பு பாசம் வரவேற்பு உள்ளிட்டவைகளைப் பார்த்தது மகிழ்ச்சி. மதுரை மண்ணின் மைந்தன் மதுரை முத்துவின் நகைச்சுவை உணர்வு எங்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது. அதேபோல தற்போது இங்கே அளிக்கப்பட்ட வரவேற்பும் எங்களை வியப்படையச் செய்கிறது.
ஆடுகளம் போன்று மதுரையின் கதைக்களமாக, மதுரைக்கு ஏற்ற வைபோடு வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக இசையமைப்பேன். ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமாரோடு இணைந்துள்ளேன். சிறப்பானதொரு முறையில் அந்த இசை அமையும்” என்று தெரிவித்தார்.