"சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட பார்த்தது இல்லை" - சென்னையில் நடிகர் ரஜினி பேச்சு

பணம், பேர், புகழ் இருக்கிறது. சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட பார்த்தது இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதன்பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன்.

இமயமலை இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டதால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கும். அதுமட்டுமல்ல, அங்கே உள்ள சித்தர்கள் குளிப்பதால் பவித்ரமாக இருக்கும்.

உடல்நிலையை பாதுக்காக்க வேண்டும், உணவு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம். அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.

வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை" என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com