"ஹரி ஹர வீரமல்லு" சினிமா விமர்சனம்

கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு தானம் செய்யும் நல்ல மனதுள்ள திருடனாக பவன் கல்யாண் வருகிறார். இதற்கிடையில் வைரங்களை கொள்ளையடிக்கும் போது நவாப் ஆட்களிடம் சிக்கிக் கொள்கிறார். பவன் கல்யாண் திறமையை அறிந்து அவருக்கு தண்டனை கொடுக்காமல் தன்னுடனே வைத்துக் கொள்கிறார் நவாப்.
இந்தநிலையில் உலகத்திலேயே விலைமதிப்பில்லா கோகினூர் வைரத்தை திருட பவன் கல்யாணத்துக்கு கட்டளையிடுகிறார் நவாப். அந்த வைரம் அவுரங்கசீப் மன்னனான பாபி தியோலிடம் இருக்கிறது. அதைக் கொள்ளை அடிக்க புறப்பட்டு செல்கிறார். இதன் பின்னணியில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. பவன் கல்யாண் வைரத்தை கொள்ளை அடித்தாரா? பாபி தியோலுக்கும், அவருக்கும் இடையேயான பிரச்சினை என்ன? இறுதியில் என்ன ஆனது என்பதே பரபரப்பான மீதி கதை.
ஒன் மேன் ஆர்மியாக முழு படத்தையும் தாங்கி நின்று அதிரடி விருந்து படைத்துள்ளார் பவன் கல்யாண். குத்துச்சண்டை, கத்தி சண்டை என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சி அதிரடி விருந்து. வைரத்தை திருடும் காட்சிகள் பரபரப்பு உச்சம்.
அழகான கதாநாயகியாக நிதி அகர்வால் ஆர்ப்பாட்டம் இல்லா நடிப்பால் கவர்கிறார். காதல் காட்சிகளில் கைதேர்ந்த நடிகை என்று நிரூபித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட திருப்பமான காட்சி பார்வையாளர்களுக்கு 'திரில்' ஏற்படுத்துவது உறுதி.
மிடுக்கான வில்லனாக வரும் பாபி தியோல் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். அதிரடி காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். சத்யராஜ் ஞானசேகர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு செய்துள்ளனர். மத குருவாக வரும் சத்யராஜ் நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் அந்தக் காலகட்டத்தை அப்படியே மீண்டும் கண் முன் காண முடிகிறது. கீரவாணியின் இசை படத்தை தாங்கி பிடித்துள்ளது. 'தாரா தாரா' பாடல் உள்ளத்தை வசியம் செய்கிறது.
அதிரடி மற்றும் திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாதது பலவீனம். ஒரு கட்டத்துக்கு மேல் திரைக்கதையில் கவனம் செலுத்த தவறி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வரலாற்று கதையை, இப்போதைய சூழலுக்கு ஏற்ப கற்பனை கலந்து கமர்சியல் விருந்தாக படைத்து ரசிக்க வைத்துள்ளார்கள் இயக்குனர்கள் கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா.
ஹரிஹர வீரமல்லு - கருத்து திணிப்பு வேண்டாமே...






