

ஐதராபாத்,
ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த மாதம் 26-ஆம் தேதி கரம் பிடித்தனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மாளிகையில் அவர்களது திருமணம் நடந்தது. அதில் திரையுலக பிரபலங்களோ, அரசியல் பிரமுகர்களோ கலந்துகொள்ளவில்லை. தம்பதிக்கு நெருக்கமான வட்டத்தினர் மட்டுமே பங்கேற்றார்கள். திருமணம் முடிந்த கையோடு தேனிலவை கொண்டாட விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் தாய்லாந்து சென்றுள்ளனர். திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் உருக்கமான பதிவை போட்டுள்ளனர். ராஷ்மிகா மந்தனா கூறியதாவது:
"ஒரு மாதம் ஆகிவிட்டதே என்று நம்பவே முடியவில்லை. திருமணம் என்பது ஒருகாலத்தில் மிகவும் தொலைவில் உள்ள ஒரு விஷயமாகத் தோன்றியது. ஆனால் இப்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த பெண்கள்தான் என் வாழ்க்கையின் முழு பயணத்திலும்... திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய தருணத்திலிருந்து இன்றுவரை.. எனக்கு துணையாக இருந்த என் ‘ஒளிரும் கவசம் அணிந்த வீராங்கனைகள்’. நான் என்றென்றும் மிகவும் நன்றியுடன் இருப்பேன். இது என்றென்றும் நீடிக்கும் அன்பு!" என்று பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா கொல்லா, பிரியா மங்க்னிதி மற்றும் அர்பிதா ஆகியோருக்கு இந்த பதிவை டேக் செய்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது; "ஒரு மாதம் ஆகிவிட்டது. நம்முடைய வாழ்க்கையில் சில பெரிய தருணங்கள் இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் அந்த தருணங்களை எதிர்கொள்வோம். அதனை எதிர்கொள்ளும் முன்பே, அது கடந்து போய்விட்டது போல உணரப்படும். ஆனால் அதை சரியாக அனுபவித்தால், அந்த தருணங்களின் நினைவுகள் என்றும் நம்முடன் இருந்து, மகிழ்ச்சியை அளித்துக் கொண்டே இருக்கும். அந்த மகிழ்ச்சியை எப்போதும் நிலைநிறுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்." என்றார்.