மம்முட்டியுடன் மோதல்: “எனக்கு கொலை மிரட்டல் வருகிறது” என்கிறார், நடிகை பார்வதி

சமூக வலைத்தளங்களில் தனக்கு மிரட்டல்கள் வருவதாக பார்வதி வேதனை தெரிவித்தார்.
மம்முட்டியுடன் மோதல்: “எனக்கு கொலை மிரட்டல் வருகிறது” என்கிறார், நடிகை பார்வதி
Published on

பிரபல மலையாள நடிகையான பார்வதி தமிழில் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், தனுஷ் ஜோடியாக மரியான் மற்றும் பெங்களூர் நாட்கள் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச பட விழாவில் பங்கேற்று பேசும்போது சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தி வசனங்கள் இடம்பெறுவதை கண்டித்தார்.

மம்முட்டி நடித்துள்ள கசாபா என்ற மலையாள படத்தில் பெண் வெறுப்பு உரையாடல்கள் அதிகம் இருப்பதாகவும் விமர்சித்தார். இதற்கு மம்முட்டி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பார்வதியை கடுமையாக சாடினார்கள். கொலை மிரட்டல்களும் வந்தன. இதனால் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து பார்வதி புகார் அளித்தார். இது தொடர்பாக ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஆனாலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனக்கு மிரட்டல்கள் வருவதாக பார்வதி வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அதில் யாரும் குறுக்கிட முடியாது. இந்திய பிரஜை என்ற முறையில் எனது எண்ணங்களை வெளிப்படுத்த எனக்கு உரிமை இருக்கிறது. சினிமாவில் பெண்கள் நிலைமை பற்றி பேசும்போது கசாபா படத்தில் இடம்பெற்றுள்ள எதிர்மறை வசனங்களை சுட்டிக்காட்டினேன். அதற்காக எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகிறது. பாலியல் ரீதியாகவும் விமர்சிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கும்படியும் வற்புறுத்துகின்றனர்.

நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. நடிகைகளுக்கு இல்லை. எனக்கு சினிமா மன உறுதியை கொடுத்து இருக்கிறது. எனது நடிப்பை விரும்பும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com