

சென்னை,
நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் மஹா, இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். படத்துக்கான விளம்பரத்தில், காவி உடை அணிந்து புகைப்பிடித்து கொண்டு பெண் துறவி போல் ஹன்சிகா உள்ளார்.
இது, இந்த மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மக்கள் முன்னணி சார்பில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அந்த அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து 2 வாரத்துக்குள் போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.