

நெல்லை,
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 4-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு விஜய் அண்ணா என்றால் ரொம்ப பிடிக்கும். நான் கேரளாவில் இருக்கிறேன், இங்கே எனக்கு ஓட்டு இல்லை என்பது கஷ்டமாக இருந்தது. எனது நண்பர்களில் விஜய் ரசிகர்கள் பலர் உள்ளனர். எங்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லையே என்பது வருத்தம்தான்.
அவர் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். அரசியலுக்கு வர வேண்டிய எந்த தேவையும் அவருக்கு இல்லை. ஆனால், மக்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பின் காரணமாகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். எனக்கு இவ்வளவு அன்பை கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் வந்திருக்கிறார்.
அந்த எண்ணத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் வெற்றி பெற வேண்டும் என்று ஆசை இருக்கிறது. மீடியாவில் பார்க்கும்போது மக்களுக்கும் அதே ஆசை இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் நான் அதை சொல்லக் கூடாது, மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.