

சென்னை,
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இருவாரமே உள்ள நிலையில், அரசியலை மையப்படுத்தி நகைச்சுவையாக டிஎன் 2026 என்ற படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியலை கலாய்க்கும் விதமாக இந்த பாடத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இப்படத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே படம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் விஜய்யை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இருப்பதாக ஆதவ் அர்ஜுனாவே கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், டிஎன் 2026 படத்தின் இயக்குனர் உமாபதி ராமையா விஜயை விமர்சிக்கும் வகையில் படத்தை எடுக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார் இது குறித்து அவர் கூறுகையில், “இது யாருக்கும் எதிரான படம் இல்லை. நாங்கள் அவமதிப்பதாக சொல்லப்படும் நபர் ஒரு சிங்கம். சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா? இதை வெறும் படமாக மட்டும் பாருங்கள், அரசியலாக்காதீர்கள்” என்றார்.