44-வது திருமண நாள் கொண்டாட்டத்தில் மீண்டும் இணைந்த பாலிவுட் நட்சத்திர தம்பதி?

பாலிவுட் ஜோடியான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதிகள் தங்களது 44வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை அடுத்து, மீண்டும் இருவரும் இணைந்து விட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
44-வது திருமண நாள் கொண்டாட்டத்தில் மீண்டும் இணைந்த பாலிவுட் நட்சத்திர தம்பதி?
Published on

1960களில் துவங்கி 80களின் இறுதி வரை இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வந்தவர் தர்மேந்திரா. ஷோலே உட்பட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள தர்மேந்திராவிற்கு, வடமாநிலங்களைத் தாண்டி இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 1954-ம் ஆண்டு பர்கஷ் கவுர் என்பவரை திருமணம் செய்து கொண்ட தர்மேந்திராவிற்கு, சன்னி தியோல், பாபி தியோல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்தி சினிமாவில் வெற்றிகரமான நடிகர்களாக உலா வருகின்றனர். 

இந்நிலையில் 1970களில் துவங்கி தன்னுடன் ஏராளமான படங்களில் நடித்து ஹிட் ஜோடியாக வலம் வந்த நடிகை ஹேமமாலினியுடன் தர்மேந்திராவிற்கு நெருக்கம் ஏற்பட்டது. நாளிதழ்களில் இவர்களது நெருக்கம் குறித்து ஏராளமான கிசுகிசுக்கள் வெளியான நிலையில், குடும்பத்தினரை எதிர்த்து கடந்த 1980-ம் ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிகளுக்கு இஷா தியோல் மற்றும் அஹானா தியோல் என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது ஹேமமாலினி பா.ஜ.க வேட்பாளராக மதுரா மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தர்மேந்திராவுக்கும், ஹேமமாலினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியானது. தர்மேந்திரா தனது முதல் மனைவி பார்கஷ் கவுர் குடும்பத்துடன் வசித்து வந்ததால், இந்த சந்தேகம் அதிகளவில் ரசிகர்களிடையே வலுத்து வந்தது. இந்த நிலையில் நேற்று தங்களது 44வது திருமண நாளை தர்மேந்திரா-ஹேமமாலினி ஜோடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர். இவர்களது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஹேமமாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஒருவருக்கொருவர் முத்தங்களை வழங்கி அவர்கள் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com