

சென்னை,
ஒரு காலத்தில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், கதையை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வந்த கதாநாயாகிகள், இப்போது ஆக்சன் பாதையைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் காஜல் அகர்வால் 'சத்யபாமா' படத்தின் மூலம் ஆக்சனில் அசத்தினார். இப்போது அதே பாணியைப் பின்பற்றி மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஆக்சன் களத்தில் இறங்கியுள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா - 'மைசா' (Maisa)
தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா, 'தி கேர்ள் பிரண்ட்' படத்தை தொடர்ந்து, இப்போது 'மைசா' என்ற பவர்புல்லான ஆக்சன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இதற்காக ராஷ்மிகா தற்போது பாங்காக்கில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சர்வதேச ஆக்சன் இயக்குநர் ஆண்டி லாங் (Andy Lang) மேற்பார்வையில் அவருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமந்தா - 'மா இண்டி பங்காரம்' (Maa Inti Bangaram)
'பேமிலி மேன்' மற்றும் 'சிட்டாடல்' தொடர்கள் மூலம் ஏற்கனவே ஆக்சனில் மிரட்டிய சமந்தா, இப்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான டீசரில் சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. இதில் அவர் ஒரு ஸ்பை ஏஜென்ட்டாக (Spy Agent) நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் மே 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சம்யுக்தா மேனன் - 'பிளாக் கோல்ட்' (Black Gold)
கிளாமர் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சம்யுக்தா மேனனும் இப்போது ஆக்சன் ரூட்டிற்கு மாறியுள்ளார். 'பிளாக் கோல்ட்' படத்தில் அவர் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் மஞ்சேரியல் பகுதியில் 40 முதல் 45 டிகிரி வெயிலில் ஆக்சன் காட்சிகளைப் படமாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.
இவ்வாறு, கிளாமர் வேடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கதாநாயகிகள் ஆக்சன் களத்தில் குதித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.