'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு


குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
x

அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதாவது, மூன்று பாடல்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதி செந்தில்குமார் தள்ளுபடி செய்தார்.

பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதி இன்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது என்றும், பிரதான வழக்கின் விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிடப்பட்டது.

1 More update

Next Story