“ஜன நாயகன்” பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியானது.
“ஜன நாயகன்” பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
Published on

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ‘ஜன நாயகன்’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில், ‘ஜன நாயகன்’ முழு படமும் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்திய திரைப்படத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘ஜன நாயகன்’ பட கசியவிட்ட வழக்கில் முதலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு முக்கிய குற்றவாளியாக ப்ரீலான்சர் அடிப்படையில் ஒப்பந்தமான எடிட்டர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட திருவேற்காட்டை சேர்ந்த உமா சங்கர் என்பவர் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் எனச் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘எனக்கும் திரைத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். படம் இணையதளத்தில் வெளியானதற்கும் எனக்கும் எந்த பங்கும் இல்லை. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த 22ஆம் தேதி நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம், மனுதாரரின் கோரிக்கைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கிய நீதிபதி வழக்கின் விசாரணையை இன்று தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உமா சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘உமா சங்கர் பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார் . அவர் சினிமா எடிட்டர் கிடையாது. இதற்காக யாரிடமும் அவர் எந்த ஒரு தொகையும் பெறவில்லை. அதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. பின்பு தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர், ‘வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் என்பவர்தான் படத்தை நகல் எடுத்து துணிக்கடையில் வேலை பார்க்கும் தனது சகோதரருக்கு அனுப்பியுள்ளார். அவர்தான் இந்த படத்தை உமா சங்கருக்கு அனுப்பியிருக்கிறார். அதன் பிறகுதான் சட்டவிரோதமாக உமா சங்கர் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். ரூ.500 கோடி முதலீட்டில் தயாரித்த இந்த படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்பு காவல் துறை தரப்பில், ‘சட்ட விரோதமாக இணையத்தில் வெளியான இந்தப்படத்தில் எடிட்டங் சமயத்தில் போடப்படும் அந்த வாட்டர் மார்க் இருக்கிறது. இதன் மூலமாக எடிட்டிங் ஸ்டூடியோவில் இருந்து தான் இந்த படம் வெளியாகியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பிரசாந்த் என்பவர் இந்த படத்தைத் திருட்டுத்தனமாக ஏற்றி பின்பு உமா சங்கருக்கு பகிர்ந்துள்ளார். அவர்தான் முழுப் படத்தை கம்ப்ரஸ் செய்து இணையத்தில் கசியவிட்டுள்ளார். இதனால் இவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com