‘ராமாயணா’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் - இந்து அமைப்பினர் வலியுறுத்தல்

'ராமாயணா' திரைப்படத்தில் ராவணனை பெருமைப்படுத்தும் வகையிலும், வால்மீகி ராமாயணத்தை திரித்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

‘ராமாயணா’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் - இந்து அமைப்பினர் வலியுறுத்தல்
Published on: 

மும்பை,

படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை உடனடியாக நீக்க வேண்டும், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘ராமாயணா’ படம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த நவம்பர் 5 ந் தேதி அன்று உலகளவில் வெளியான பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படம் 'ராமாயணா'. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், லட்சுமணனாக ரவி துபே மற்றும் அனுமனாக சன்னி தியோல் நடித்துள்ளனர். மேலும் அருண் கோவில் (தசரதர்), லாரா தத்தா (கைகேயி), ரகுல் பிரீத் சிங் (சூர்ப்பனகை) மற்றும் காஜல் அகர்வால் (மண்டோதரி) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர். இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் குற்ற சாட்டு

இந்த நிலையில், நாடு முழுவதும் சமீபத்தில் வெளியான 'ராமாயணா' திரைப்படத்தில் ராவணனை பெருமைப்படுத்தும் வகையிலும், வால்மீகி ராமாயணத்தை திரித்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் படத்திற்கு எதிராக மத்திய மும்பையில் உள்ள தாதர் ரெயில் நிலையத்திற்கு வெளியேயும், கோலாப்பூரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சதுக்கத்திலும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்

இதில் பங்கேற்றவர்கள், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு அனுப்புவதற்கான கோரிக்கை மனுக்களில் கையெழுத்திட்டனர். அந்த மனுவில், படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை உடனடியாக நீக்க வேண்டும், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், அத்துடன் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை வெளியிடுவதற்கு முன்பு மடாதிபதிகள், ராமாயண அறிஞர்கள் மற்றும் இந்து சாஸ்திர வல்லுனர்களுக்கு திரையிட்டு காட்டுவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது ராவணனை புகழ்ந்து பாடும் கதையா?

இதுகுறித்து இந்து ஜனஜாக்ருதி சமிதி செய்தி தொடர்பாளர் உதய்துரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "படத்தில் சில காட்சிகளை பார்க்கும்போது, இது ராமாயண படமா அல்லது ராவணனை புகழ்ந்து பாடும் கதையா என்ற கேள்வி எழுகிறது. ஆயுதமின்றி இருக்கும் ராவணன் ஆயிரக்கணக்கானோருடன் சண்டையிடுவதாகவும், ஆயுதம் ஏந்திய ஸ்ரீராமரும், லட்சுமணரும் அரக்கர்களைக் கண்டு தப்பி ஓடுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமாயணத்தை இவ்வாறு திரிப்பதை பாரதம் சகித்துக்கொள்ளாது" என்று கூறியுள்ளார்.

X