

டாப் கன், மேவரிக் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ஜேம்ஸ் ஹாண்டி. அமெரிக்காவை சேர்ந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டர்சானா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்புறத் தோட்டத்தில், கத்திக்குத்துக் காயத்துடன் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மருத்துவக் குழுவுக்கு அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு அவசர உதவிக்குழுவினர் மயக்க நிலையில் இருந்த ஜேம்ஸ் ஹாண்டியை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹாண்டியின் காதலியின் மகனான மைக்கேல் கிளெட்ஹில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், மைக்கேல் கிளெட்ஹில், குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் தனது தந்தை என்றும் பாவம் செய்தவர் என்றும் ஜேம்ஸ் ஹாண்டி பற்றி மைக்கேல் கிளெட்ஹில் கூறியுள்ளார். தொடர்ந்து கிளெட்ஹில் சிறையில் அடைக்கப்பட்டார்.
காதலியின் மகனால் கொடூரமாக கொல்லப்பட்ட ஜேம்ஸ் ஹாண்டி, டாப் கன் மட்டுமின்றி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஜுமான்ஜி, அராக்னோஃபோபியா, அன்பிரேக்கபிள், லோகன், என்.ஒய்.பி.டி ப்ளூ, ரிஸ்ஸோலி & ஐல்ஸ், அலியாஸ், என்.சி.ஐ.எஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கிரிமினல் மைண்ட்ஸ் உள்ளிட்ட படங்கள் மற்றும் தொடர்களிலும் ஜேம்ஸ் ஹாண்டி நடித்துள்ளார்.