

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த 'கருப்பு' திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் கருப்பு ரூ.300 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி இயக்கிய இப்படம் மலையாளம், தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த படங்களில் இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருப்பு குறித்து பேசிய நடிகை ஜோதிகா, "கருப்பு திரைப்படத்திற்குக் கிடைத்த அன்பைக் கண்டு நாங்கள் நெகிழ்ந்து போயிருக்கிறோம். கடைசி 10 நிமிடங்கள் சூர்யா பிரமாதமாக நடித்திருக்கிறார். இந்த வெற்றியால் வீடே கொண்டாட்டத்தில் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.