ஆஸ்பத்திரியில் அனுமதி டைரக்டர் ஜனநாதன் கவலைக்கிடம்

பிரபல டைரக்டர் எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி டைரக்டர் ஜனநாதன் கவலைக்கிடம்
Published on

பிரபல டைரக்டர் எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனநாதன் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடித்த இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடித்த ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை, விஜய்சேதுபதி, ஆர்யா நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விஜய்சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. 61 வயதாகும் ஜனநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. நடிகர் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கேயார், இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் நேரில் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர். அமீர் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை நடைபெறுகிறது. எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com