

சென்னை,
விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" படத்தில் த.வெ.க நிர்வாகி அருண் ராஜ் நடித்துள்ளார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் விஜய்யின் த.வெ.கவில் இணைந்தார். த.வெ.கவில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு அருண் ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அருண் ராஜ், ஜனநாயகன் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்சார் பிரச்சினையில் சிக்கி "ஜனநாயகன்" படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. எனினும், "ஜனநாயகன்" படத்தின் டீசரில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் அருண் ராஜ், விஜய்யுடன் நடந்து வரும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது விஜய் ரசிகர்களுக்கும் த.வெ.கவினருக்கும் கொஞ்சம் வியப்பை கொடுத்தது.
இந்த சூழலில், ஜனநாயகன் படத்தில் நடித்தது தொடர்பாக அருண் ராஜ் பேசியுள்ளார். அருண் ராஜ் கூறுகையில், “ஜனநாயகன் படத்தில் என்னை நடிக்க வைத்ததே விஜய்தான். நடிக்க ஆசை இருப்பதாக விஜய்யிடம் கூறிய நிலையில், அவர் தனது கடைசி படத்தில் நடிக்க வைத்தார். "ஜனநாயகன்" படத்திற்காக ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங்கில் பங்கேற்றேன்” என்று கூறியுள்ளார்.