திரைப்படங்களுக்கு சிபிஎப்சி சான்றிதழ் அளிப்பது எப்படி?

சிபிஎப்சி சான்றிதழ் இன்றி படத்தை திரையிட முடியாது.
சென்னை,
நடிகர் விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் "ஜனநாயகன்" படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால், படக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் திரையிடப்படும் எந்த ஒரு திரைப்படத்திற்கு 1952 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்துக்கு (சிபிஎப்சி) சான்றிதழ் பெறுவது அவசியம். எனவே சிபிஎப்சி சான்றிதழ் இன்றி படத்தை திரையிட முடியாது. சிபிஎப்சி ஒரு படத்திற்கு சான்றிதழ் வழங்கும் போது என்னென்ன விதிகளை பின்பற்றுகிறது என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு;
* திரைப்படத்திற்கு A, U/A. U, U/A16, U/A12 என ஐந்து தணிக்கை சான்றிதழ்கள் உள்ளன.
* மதத்தை புண்படுத்துதல், ராணுவத்தை, இந்தியாவை இழிவுபடுத்துதல் போன்ற காட்சிகள் படத்தில் இருக்கக் கூடாது.
* நேரடியாக கத்தியில் குத்துவது போல காட்சிகள் படத்திலிருந்தால் அதை தணிக்கை குழு நீக்கிவிடும்.
* பெண்களை இழிவுபடுத்துதல், இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகள், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இருந்தால் அதனை மியூட் அல்லது நீக்க சொல்வார்கள்.
* தணிக்கை சான்று வழங்குவதில் தணிக்கை குழுவின் பெரும்பான்மை என்பது கிடையாது.
* தணிக்கை குழுவில் உள்ள ஒரு நபர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தணிக்கை சான்று வழங்குவதற்கு தாமதம் நீடிக்கும்.
* தணிக்கை குழுவில் உள்ள உறுப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் படம் மறு ஆய்வுக் குழுவிடம் செல்லும்.
* உடன்பாடு இல்லாத படக்குழுவினர், அடுத்த கட்ட நடைமுறையான ரிவைசிங் கமிட்டி என்ற நடைமுறைக்கு செல்லலாம். கோர்ட்டுக்கு சென்று தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி, தங்களுக்கு ஏற்ற சான்றிதழ் பெறலாம்.






