"கண்ணப்பா" படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்


கண்ணப்பா படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
x
தினத்தந்தி 28 Jun 2025 7:00 AM IST (Updated: 28 Jun 2025 7:01 AM IST)
t-max-icont-min-icon

முகேஷ்குமார் சிங் இயக்கிய "கண்ணப்பா" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

2-ம் நூற்றாண்டில் உடுமூரில் (தற்போதைய ஸ்ரீகாளஹஸ்தி) நடக்கும் கதை.

உடுமூர் காட்டுப் பகுதி தலைவர்களில் ஒருவரான சரத்குமாரின் மகன் விஷ்ணு மஞ்சு. தனது நண்பரை ஊர் மக்கள் கடவுளுக்கு பலி கொடுத்ததால், அன்றிலிருந்து கடவுளை வெறுக்கிறார் கடவுள் சிலை வெறும் கல் என்று நம்புகிறார். இதற்கிடையில் விஷ்ணு மஞ்சு வசிக்கும் பகுதியில் இருக்கும் வாயு லிங்கத்தை அபகரிக்க அர்பித் ரங்கா திட்டமிடுகிறார். இதனை தடுக்க ஊர் மக்கள் ஒன்று சேர்கிறார்கள்.

இதற்கிடையில் ப்ரீத்தி முகுந்தனை காதலித்து அதன் பின்னணியில் பெரிய பகையை சம்பாதிக்கும் விஷ்ணு மஞ்சுவை, ஊரில் இருந்து விலக்கி வைக்கிறார் சரத்குமார். இதற்கிடையில் வாயு லிங்கத்தை விஷ்ணு மஞ்சு பார்க்கும் சூழல் ஏற்பட கதையின் போக்கு மாறுகிறது.

இந்த சூழலில் வாயு லிங்கத்தை அபகரிக்க நடக்கும் போரில் அதை காப்பாற்ற சண்டையிடும் சரத்குமார் கொல்லப்படுகிறார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க விஷ்ணு மஞ்சு போரில் குதிக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? போரில் விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றாரா? கடவுளை வெறுக்கும் அவர் சிவ பக்தர் ஆனாரா என்பதே கதை.

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் சகிதமாய் படம் முழுக்க நிறைந்து இருக்கிறார் விஷ்ணு மஞ்சு. வாயு லிங்கத்தை அவர் காணும் காட்சி சிலிர்ப்பு. சண்டை காட்சிகளிலும் ஆக்ரோஷம் காட்டுகிறார். ப்ரீத்தி முகுந்தன் அழகான நடிப்பால் வசீகரிக்கிறார். பாடல் காட்சிகளிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.

சிவபெருமானாக அக்சய் குமாரும், பார்வதி தேவியாக காஜல் அகர்வாலும் வரும் காட்சிகள் பரவசம். ஊர் தலைவராக வரும் சரத்குமாரின் நடிப்பு கம்பீரம். வாயு லிங்கத்தை பூஜிக்கும் மோகன் பாபுவின் நடிப்பு ஆர்ப்பரிப்பு.

மதுபாலா, முகேஷ் ரிசி, தேவராஜ், சம்பத் ராம், ஐஸ்வர்யா என அத்தனை பேரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ் அசத்தி இருக்கிறார்கள். செல்டன் ஷா ஒளிப்பதிவு ஆச்சரியம் தருகிறது. கிராபிக்ஸ் காட்சிகளும் மிரட்டல். ஸ்டீபன் தேவாசி இசை படத்துடன் ஒன்று செய்கிறது.

கதாபாத்திரங்களின் நகர்வுகள், நடிகர் நடிகைகளின் அபார நடிப்பு படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் வேகம் குறைவு திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். இதிகாசங்களில் கேட்ட கதையை இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு கமர்சியல் கலந்து ரசிக்கும்படியான படமாக எழுதி இயக்கியுள்ளார், முகேஷ்குமார் சிங்.

கண்ணப்பா - காரம் தூக்கல்

1 More update

Next Story