ஆதரவு கொடுக்கிறேன் என்று ஆசையை உருவாக்கி விட்டு எத்தனை நிபந்தனை வைக்கிறார்கள் - நடிகை கஸ்தூரி

2 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
ஆதரவு கொடுக்கிறேன் என்று ஆசையை உருவாக்கி விட்டு எத்தனை நிபந்தனை வைக்கிறார்கள் -  நடிகை கஸ்தூரி
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது ஆதரவை தெரிவித்துள்ளது. விரைவில் விஜய்யின் த.வெ.க. கட்சி ஆட்சியமைக்க உள்ளது. தி.மு.க கூட்டணி கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நடைபெற்று வரும் இழுபறி குறித்து நடிகை கஸ்தூரி “இது போன்ற இழுபறி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. மக்கள் ஓட்டு போட்டு விட்டு காத்திருக்கிறார்கள். நாளைக்குள் ஒரு முடிவு வரவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி வந்து விடும். இது போன்ற சூழ்நிலையை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. இது என் தனிப்பட்ட கருத்து. ஓட்டு விகிதத்திலும் சீட்டு விகிதத்திலும் விஜய்க்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர்.

அப்படி இருக்கும்போது விஜய் கூட்டணி இல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தமிழக வரலாற்றில் அதுவும் நடந்துள்ளது. அதுதான் நல்லது. ஆதரவு கொடுக்கிறேன் என்று ஆசையை உருவாக்கி விட்டு எத்தனை நிபந்தனை வைக்கிறார்கள் பாருங்கள்.

கல்யாணம் நடைபெறுவதற்கு முன்பு மணப்பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவது போல் இத்தனை நிபந்தனை? இதை கேள்விபடும் போதே பகீர்... பகீர்... என்கிறது.

2 எம்.எல்.ஏ.வை வைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னொரு புறம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிலேயே குடியிருக்கிறார்கள். எல்லாமே துரந்தர் வேலையாக இருக்கிறது. இவர்களை வைத்துக் கொண்டு விஜய் எப்படி நல்லாட்சி தர முடியும். அதை விட இவர்கள் எல்லோரையும் விஜய் குடி முழுக வேண்டும். தனியாக வரவேண்டும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com