

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரூ.600 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் படம்
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வெளியீட்டு தேதி குறித்து ஆலோசனை
படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி இசை, காட்சித் தொகுப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 8-ஆம் தேதி வெளியிடுவது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஷாருக்கான் ‘கிங்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் காட்சிகள் இந்த மாத இறுதியில் சென்னையில் படமாக்கப்பட உள்ளன.
ரஜினியும் ஹிருத்திக் ரோஷனும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர் 1986 ஆம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ என்ற படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தார். அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் ஹிருத்திக் ரோஷன் பிரபலமானார். பல ஆண்டுகளாக ரஜினியுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஹிருத்திக் ரோஷனின் விருப்பம் இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது.