

மும்பை,
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தற்போது இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அர்ஷத் வார்சி, ராணி முகர்ஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான், தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய ஷாருக்கான், "வாழ்க்கையில் அவமானங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சந்திக்காமல் யாரும் வெற்றியின் உச்சியை அடைந்ததில்லை. எனது வாழ்க்கையிலும் பல அவமானங்களை சந்தித்துள்ளேன். அவற்றில் சில இன்றும் ஆறாத காயங்களாக மனதில் இருக்கின்றன.
ஆனால் அந்த அவமானங்களே வெற்றிக்கான வெகுமதியாக மாறும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் தளராமல் மீண்டும் எழுந்து ஓட வேண்டும். தேடலும் முயற்சியும் இருக்கும் வரை வெற்றியை நோக்கிய பயணமும் தொடரும்," என்று ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். ஷாருக்கானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.