

சென்னை,
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
இவர் தற்போது 'யூத்' என்ற படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார். பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 11 நாட்களில் 'யூத்' திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான ‘யூத்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கென், “நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து மக்கள் கத்துறாங்கன்னு நம்பவே முடியல. நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையா நடக்குது. எங்க அப்பா ஒரு விஷயம் சொல்லுவாரு, நம்ம ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நிச்சயமா நடக்கும்போது நமக்கு நம்புகிற மாதிரி இருக்காதுன்னு சொல்லுவாரு.
என் ஆசையை நிறைவேத்துன தயாரிப்பாளருக்கு நன்றி. எங்க அப்பா, அம்மாவ பெருமைப்படுத்தத் தான் இந்த 'யூத்' படத்தை நாங்க பண்ணோம். அவங்க எல்லாரும் இப்போ சந்தோஷமா இருக்காங்க.நாங்க நினைச்சதைத் தாண்டி படம் கலெக்ஷன் ஆகிருக்கு. இந்தப் படத்துல நடிச்ச எல்லாருமே அடுத்த அடுத்த கட்டத்துக்கு போகுறது சந்தோஷமா இருக்கு. எல்லா விமர்சனங்களையும் பார்த்தேன், படிச்சேன். என்னோட அடுத்தடுத்த படங்கள்ல அது எல்லாத்தையும் மாத்த முயற்சி செய்றேன். என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்'னு நினைக்கல. இந்த ‘யூத்’ படம் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்துருக்கு. ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு. எல்லோருக்கும் ரொம்ப நன்றி” என்று பேசியிருக்கிறார்.