“பெத்தி” பட சர்ச்சையில் எனக்கும் பங்கு இருக்கிறது - நடிகை ஜான்வி கபூர்

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
“பெத்தி” பட சர்ச்சையில் எனக்கும் பங்கு இருக்கிறது - நடிகை ஜான்வி கபூர்
Published on: 

‘பெத்தி’ திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரம் மற்றும் பெண்களின் சித்தரிப்பு குறித்துப் பேசிய நடிகை ஜான்வி கபூர், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் தனக்கு ஒரு வகையான உரிமை மீறல் மற்றும் அசவுகரியமான அனுபவமாகவே இருந்ததாக குறிப்பிட்டார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்த ‘பெத்தி’ படம் கடந்த ஜூன் 6ம் தேதி வெளியானது. இப்படம் 400 கோடி வசூலித்துள்ளது.

ஜான்வி கபூரின் கதாபாத்திரம் குறித்து சர்ச்சை

‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம், அவருக்காக அளிக்கப்பட்ட உடைகள், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிய விதம், பெண்களை அவமதிப்பு செய்வதாகவே சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில், கதாநாயகிக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், அவரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகவும் சில ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கதாபாத்திரம் அளவுக்கு மீறிய ஆபாசத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இயக்குநர் புச்சி பாபு சனா வருத்தம் தெரிவித்திருந்தார்.

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் ‘காபி வித் கரண் சீசன் 9’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தான் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் மற்றும் பெண்களின் சித்தரிப்பு குறித்துப் பேசிய அவர், உடலுறுப்பு மற்றும் பெண் தன்மையை இழிவுபடுத்துதல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு வழிவகுக்கும் விதமான கதைக் களத்தைக் கொண்டிருந்ததாகத் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர், “பெத்தி பட விவகாரம் குறித்து நான் பல விஷயங்களை உணர்ந்தேன். இதைப் பற்றிப் பேசுவதற்கு நான் தயங்கியதற்குக் காரணம், அந்தப் படத்திற்காகப் பலரும் கடுமையாக உழைத்திருந்தார்கள் என்பதுதான். மேலும், இதைப் பற்றி நான் என்ன சொல்வது, உண்மையில் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. இந்த சர்ச்சையில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதால், அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதுபோன்ற கதைக்களம் நமது சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் தொடர்பாக, ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் என் மனசாட்சியை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், பெண்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த குற்றவுணர்வை நான் எப்போதும் சுமந்து கொண்டிருப்பேன்.

இயக்குநர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

பெண்களை மிகையாகப் பாலியல் ரீதியில் பண்டமாகச் சித்தரித்ததா? பாலியல் வன்கொடுமையை ஒரு கதையாடலின் வழியாக இயல்பானதாகக் காட்டியதா? ஆம். ஆனால், இனிமேல் இதுபோன்ற ஒன்று மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம்.மேலும், இதைப் பற்றிப் பேசும்போது மற்றவர்கள் மீது பழியைச் சுமத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு நடிகையின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியும். இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதைச் செய்ய வேண்டும்; தொழில்முறையாக நடந்துகொள்ள வேண்டும்; இயக்குநரின் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அதேப்போல், ஒரு காட்சி இறுதியாகத் திரையில் எப்படித் தோன்றும் என்பதற்கான முழுமையான வடிவத்தை திரைக்கதைகள் எப்போதும் வழங்குவதில்லை. குறிப்பாக, படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் கேமரா கோணங்கள் போன்ற விவரங்கள் திரைக்கதையில் இடம்பெறுவது மிகவும் அரிது. எனவே, எனக்குத் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், அந்தக் காட்சிகள் ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களைக் குறைப்பதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டேன். இருந்தாலும், இந்த விவகாரத்தில் எனக்கான பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சில சலுகைகள் கிடைக்கக்கூடிய ஒரு பின்னணியில் இருந்து வருகிறேன். அந்தச் செல்வாக்கை நான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், நான் சலுகைகள் பெற்ற பின்னணியில் இருந்து வருகிறேன் என்பதற்காக எப்படியும் என்னை விமர்சிக்கத்தான் போகிறார்கள். அப்படியிருக்கும்போது, அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் பிரச்னையை இன்னும் வலுவாக எதிர்கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com