விஜய்க்கு நான் மிகப்பெரிய ரசிகை - வைரலாகும் சுதா கொங்கரா பேட்டி

பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி படம் களமிறக்கப்படுவதாக விஜய் ரசிகர்களால், படம் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்யப்பட்டது. எனினும், சென்சார் பிரச்சினையில் சிக்கிய ஜனநாயகன் படம் தற்போது வரை திரையரங்குகளுக்கு வரவில்லை. அதே நேரத்தில் பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், பராசக்தி எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. அதாவது, "பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள் என நினைக்கவில்லை. அவர்கள் விஜய் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்திற்கு உரியது. நான் பதிவு செய்திருப்பவை கூட மென்மையானவை. பல மோசமான விமர்சனங்கள் வருகின்றன.
"ஒரு பெண்ணின் கனவுகளை உங்களால் சிதைக்க முடியாவிட்டால், அவளது நடத்தையை சிதையுங்கள்" என்ற வாசகம் தான் என் நினைவுக்கு வருகிறது. வெறுமனே என் படம் தணிக்கை பெற்றது, வெளியாகிவிட்டது என்பதற்காக இத்தகைய தாக்குதல்களா? அதை வாங்க நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா?" என்றார்.
மேலும், எனக்கு விஜய் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகை நானாக தான் இருப்பேன். அதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். விஜய் சாரிடம் இதனை நேரடியாகவே நான் சொல்லி இருக்கிறேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டது. இவ்வாறு விஜய் குறித்து சுதா கொங்கரா பேசியது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.






