

சென்னை,
‘டிராகன்’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ‘ஜெயிலர் 2’ படத்தைத் திரையரங்கில் காண ஆவலுடன் இருப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் வரும் 15-ம் தேதி (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி, டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாள் காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘டிராகன்’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ‘ஜெயிலர் 2’ படத்தைத் திரையரங்கில் காண ஆவலுடன் இருப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “‘ஆரா’வின் (Aura) சொந்தக்காரரே நாளை பெரிய திரையில் ‘ஆரா ஃபார்மிங்’ (Aura Farming) செய்வதைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் திரை ஆளுமையையும் அவரது தனித்துவமான நடிப்பையும் குறிக்கும் வகையில் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், ரஜினிகாந்த் அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜெயிலர் 2’ வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.