

சென்னை,
ஸ்ரீலீலா தனது சமூக வலைதளப் பதிவில், ‘டோரதி’ திரைப்படம் குறித்து பல நல்ல விஷயங்களை கேள்விப்பட்டு வருவதாகவும், விரைவில் படத்தை பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் நேற்று (செப்டம்பர் 25) உலகளவில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த் மற்றும் சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில், சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் ‘டோரதி’ பெற்றுள்ளது.
நேற்று வெளியான ‘டோரதி’ திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்பு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றிருந்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருவது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் இந்த படத்தை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ‘டோரதி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கவனம் கிடைத்து வரும் நிலையில், நடிகை ஸ்ரீலீலா படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலீலா தனது சமூக வலைதளப் பதிவில், ‘டோரதி’ திரைப்படம் குறித்து பல நல்ல விஷயங்களை கேள்விப்பட்டு வருவதாகவும், விரைவில் படத்தை பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரசிகர்கள் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து திரையரங்குகளில் படத்தை அனுபவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். “இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட படக்குழுவினரையும் தனது பதிவில் ஸ்ரீலீலா குறிப்பிட்டுள்ளார்.