

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்', 'ரெட்ரோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'கூலி' படத்தில் பூஜா நடனமாடிய 'மோனிகா' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறாமல் இருப்பதால், அவர் கவலையில் இருந்து வருவதாகவும், இதனால் சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பூஜா ஹெக்டே, "சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சரிசமம். நானும் அப்படித்தான். வெற்றி, தோல்விகளை கடந்துதான் பயணிக்கிறேன். எனவே எதுவும் என் மனநிலையை கவலைப்படுத்திடாது. வழக்கம்போல பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மற்றபடி எந்த யூகங்களுக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பூஜா ஹெக்டே இந்தி, தெலுங்கில் தலா 2 படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.