

சென்னை,
'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழுடன் தெலுங்கு திரையுலகிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
சமீபகாலமாக உடல் எடையை குறைத்து புதிய படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, தற்போது நடிகர் விஷால் நடித்து வரும் 'மகுடம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது பள்ளி பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நடிகை அஞ்சலி பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "7-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை என்னுடன் படித்த மாணவன் ஒருவர், தொடர்ந்து என்னை காதலிப்பதாகக் கூறி வந்தார். அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து, அவரிடம் நேரடியாக பேசினேன்.
அப்போது, 'முடிந்தால் எனக்கு ராக்கி கட்டிக் காட்டு' என்று அவர் சவால் விட்டார். உடனே நான் அவருக்கு ராக்கி கட்டிவிட்டேன். ஆனால், அவர் அந்த ராக்கியை கழற்றி எறிந்துவிட்டு, 'நான் உன் அண்ணன் இல்ல... கண்ணன்!' என்று சிரித்தபடியே கூறினார். அதன் பிறகு நானும் அவரை சந்திக்கவில்லை; அவரும் என்னை சந்திக்கவில்லை," என்று கலகலப்பாக பகிர்ந்து கொண்டார்.
அஞ்சலியின் இந்த சுவாரஸ்ய அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.