“டோரதி போன்ற படம் வந்ததற்கு பெருமைப்படுகிறேன்” - தமிழரசன் பச்சமுத்து

திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

“டோரதி போன்ற படம் வந்ததற்கு பெருமைப்படுகிறேன்” - தமிழரசன் பச்சமுத்து
Published on: 

சென்னை,

“டோரதி போன்ற ஒரு திரைப்படம் தமிழ் சினிமாவில் இருந்து வந்ததற்கு நான் பெருமை அடைகிறேன். இந்த அற்புதமான படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இருக்கும் இதே திரைத்துறையில் நானும் ஒரு அங்கமாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன்.” என பாராட்டி தமிழரசன் பச்சமுத்து பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

கவனம் பெற்ற ‘டோரதி’

வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது.

தமிழரசன் பச்சமுத்து பாராட்டு

இந்த நிலையில், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “டோரதி போன்ற ஒரு திரைப்படம் தமிழ் சினிமாவில் இருந்து வந்ததற்கு நான் பெருமை அடைகிறேன். இந்த அற்புதமான படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இருக்கும் இதே திரைத்துறையில் நானும் ஒரு அங்கமாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன். கார்த்திக் சுப்பராஜுக்கு சல்யூட்!” என்று தெரிவித்துள்ளார். தமிழரசன் பச்சமுத்துவின் இந்த பாராட்டு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com