“ஜெயலலிதாவாக நடிக்க தயாராகிறேன்” -கங்கனா ரணாவத்

ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
“ஜெயலலிதாவாக நடிக்க தயாராகிறேன்” -கங்கனா ரணாவத்
Published on

ஏ. எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:-

ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இதற்காக அவரது பிரசாரங்களை கேட்கிறேன். உடல் மொழிகள் எனக்கு பொருந்துகிற மாதிரியும் அவர் மாதிரி நடக்கவும் பேசவும் பயிற்சிகள் எடுக்கிறேன். கதாநாயகியாக சாதித்து விட்டு தமிழக அரசியலில் கஷ்டங்களை தாங்கி பெயர் எடுத்தவர் ஜெயலலிதா.

அவரை அடக்கவும் வளரவிடாமல் தடுக்கவும் சில தலைவர்கள் முயற்சித்தனர். அதை மீறி முன்னேறி முதல்வராக பதவி வகித்தார். சிறைக்கு போய் வந்தபிறகும் முதல்வர் ஆனார் என்றால் அவர் எவ்வளவு பெரிய தலைவியாக இருக்க வேண்டும். புரட்சித்தலைவி என்ற பட்டத்துக்கு தகுதியானவர். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பெண்கள் அரசியலில் கஷ்டங்களை தாண்டி முன்னுக்கு வரலாம் என்பதற்கு அவர் உதாரணம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது.

படப்பிடிப்பு மைசூரில் தொடங்கும். அதன்பிறகு சென்னை மும்பையிலும் படமாகும். கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு நடிகையாக வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பிய காலத்தில் இருந்து கதை ஆரம்பிக்கும்.

விஜயேந்திர பிரசாத், ரஜத் அரோரா ஆகியோர் திரைக்கதை உருவாக்கும் பணியில் உள்ளனர். மற்ற வேலைகளை ஒதுக்கி விட்டு 100 சதவீத உழைப்பை இந்த படத்துக்கு கொடுக்க தயாராகிறேன். இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com